அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் கோவை
218-ம் ஆண்டு தினவிழாவையொட்டி அனைத்து துறைகளிலும் கோவை சிறந்து விளங்குவதாக கலெக்டர் சமீரன் கூறினார்.
218-ம் ஆண்டு தினவிழாவையொட்டி அனைத்து துறைகளிலும் கோவை சிறந்து விளங்குவதாக கலெக்டர் சமீரன் கூறினார்.
கோவை தினம்
தொழில் நகரமான கோவை ஜவுளித்தொழில், மோட்டார் பம்புசெட், கிரைண்டர், தங்கநகை உற்பத்தி என்று அனைத்து தொழில்களிலும் பிரசித்து பெற்று விளங்குகிறது. கல்வி, மருத்துவம் ஆகியவற்றிலும் சென்னைக்கு அடுத்தநிலையில் உள்ளது. கோவை நகரின் மக்கள் தொகை தற்போது 25 லட்சம் ஆகும்.
தென் இந்தியாவில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக கோவை 4-வது பெரிய நகரமாகும். இந்தியாவின் 16-வது பெரியநகரமாகவும் விளங்குகிறது. 1804-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது. இதனால் நவம்பர் 24-ந்தேதி கோவை பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை உருவாகி நேற்றுடன் 218 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி கோவையின் 218-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.
லட்சினை வெளியீடு
அதன்படி வாலாங்குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பகுதியில் கோவை தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோவை தினத்திற்கான லட்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டர் சமீரன் பேசும்போது:-
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24-ந்தேதி கோவை தினம் கொண்டா டப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகி றேன். கோவை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவை விழாவை முழுமையாக கொண்டாட முடியாதநிலை ஏற்பட்டது. கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் நகரங்களில் வசித்து வருகிறார்கள்.
போட்டிகள் நடத்தப்படும்
கிராமத்தில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல் நகரில் கோவை தின விழா திருவிழா போல் கொண்டாடு வது எந்த நகருக்கும் இல்லாத சிறப்பான அம்சம் ஆகும். இதில் கின்னஸ் சாதனையும் படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கோவை தினத்தையொட்டி ஜனவரி மாதம் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசும்போது, கோவை தினம் போற்றுதலுக்குரியது. கோவை விழாவை மிகவும் சிறப்பாக நடத்தி அனைவரும் பங்குபெறுவோம் என்றார்.
இதில் துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.