ஒரு மணி நேர மழைக்கு கூட தாங்காத கோவை மாநகரம்
ஒரு மணி நேர மழைக்கு கூட தாங்காமல் தெருவெங்கும் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடும் நிலையில் கோவை மாநகரம் உள்ளது. இதற்கு தீர்வு காண தாமதம் ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை
ஒரு மணி நேர மழைக்கு கூட தாங்காமல் தெருவெங்கும் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடும் நிலையில் கோவை மாநகரம் உள்ளது. இதற்கு தீர்வு காண தாமதம் ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவையில் மழை
கோவை மாநகரில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மேலும் மாநகராட்சி சாலைகளில் வடிகால் வசதி சரியாக இல்லாததாலும், அடைப்புகள் நீக்கப்படாததாலும் மழை வெள்ளம் சாலைகளில் தேங்கியது. கழிவுநீர் வடிந்தோட முடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலைகளில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது.
பாப்பநாயக்கன்பாளையம், பழையூர், பரமேஸ்வரன் லே அவுட், சிவானந்தா காலனி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழைநீரில் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியது.
போக்குவரத்து தடை
ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. அந்த சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றதால், வாகனங்களில் சென்றவர்கள் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். குறிப்பாக லங்கா கார்னர் பகுதியில் இன்னும் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அங்கு மழையின்போது போக்குவரத்து தடைபடுகிறது. இதனால் வாகனங்கள் குட்ஷெட் ரோடு வழியாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் தீர்வு காணவில்லை. மழையின் போது அவினாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம், கிக்கானி ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதி ஆகியவற்றின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வானங்கள் செல்ல முடியவில்லை.
தீர்வு காண வேண்டும்
கணபதி அத்திப்பாளையம் பிரிவில் இருந்து தென்புறமாக செல்லும் வழியில் வங்கி முன்புறம் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது.
ஒரு மணி நேரமழைக்கு கூட தாங்காத நிலையில் கோவை மாநகரம் உள்ளது. இதனால் தெருவெங்கும் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தாமதம் ஏன்?
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சாக்கடை அடைப்புகளை நீக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை செப்பனிட வேண்டும். இதன் மூலம் மட்டுமே உரிய தீர்வு கிடைக்கும்.
கோவை மாநகரில் சொத்துவரி, தொழில் வரி, குப்பை வரி என்று அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டு விட்டது. தினமும் ரூ.5 கோடி வரை வசூலாகி வருகிறது. வருமானம் உயர்ந்து வரும் நிலையில், சீரமைப்பு பணிகளை செய்ய இன்னும் தாமதம் ஏன்?.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.