கோவை ஐ.டி. ஊழியரிடம் ரூ.10¼ லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி கோவை ஐ.டி. ஊழியரிடம் ரூ.10¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி கோவை ஐ.டி. ஊழியரிடம் ரூ.10¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஐ.டி. ஊழியர்
கோவை கணபதி கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்தவர் சத்யா நாகிரா (வயது 29). ஐ.டி ஊழியர். இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதை பார்த்து மகிழ்ந்த அவர், அதில் குறிப்பிட்டு இருந்த லிங்கில் நுழைந்து தனது விவரங்களை பதிவு செய்தார்.
சில நிமிடங்களில் ஒருவர் சத்யா நாகிராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். தொடர்ந்து பேசிய அந்த நபர், ஆன்லைனில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கான லாபம் அனைத்தும் உங்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ள பிரத்யேக ஐ.டி.யில் வந்து சேரும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கி கணக்கிற்கு மாற்றி எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
ஆன்லைனில் முதலீடு
உடனே அவர் அந்த நபர் கூறியபடி ரூ.1000 முதலீடு செய்தார். சிறிது நேரத்தில் அவருடைய ஐ.டி.க்கு ரூ.1,200 வந்தது. உடனே அவர் அந்த பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டார். அடுத்த நாள் ரூ.2 ஆயிரம் முதலீடு செய்தார். ரூ.2,500 கிடைத்தது.
இப்படி படிப்படியாக முதலீடு செய்யும் பணத்தை அதிகரித்து சென்றார். பின்னர் ரூ.1 லட்சம் முதலீடு செய்த போது ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கிடைத்தது. பின்னர் ரூ.2 லட்சம் முதலீடு செய்தார். அப்போது அவருடைய ஐ.டி.க்கு ரூ.2½ லட்சம் வந்தது. ஆனால் அந்த பணத்தை அவரால் தனது வங்கி கணக்குக்கு மாற்ற முடியவில்லை.
ரூ.10¼ லட்சம் மோசடி
உடனே அந்த நபரை தொடர்பு கொண்டு சத்யா நாகிரா விசாரித்தார். அப்போது ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக முதலீடு செய்யும்போது அதில் கிடைக்கும் லாபத்தை உடனடியாக எடுக்க முடியாது, சிறிது நாள் கழித்துதான் எடுக்க முடியும் என்று கூறி உள்ளார். இதை நம்பிய அவர் தொடர்ந்து ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்தை படிப்படியாக முதலீடு செய்தார். ஆனால் அதற்கான லாபத்தொகையை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தவித்து வந்தார். இதனால் மோசடி செய்யப்பட்டு உள்ளதை உணர்ந்த சத்யா நாகிரா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.