கோவை ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெற்ற ஜெகன்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை,
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் கடந்த 1967-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவிற்கு வெளியே அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கிருஷ்ண பக்தர்களால் பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கோவை இஸ்கான் அமைப்பு சார்பில் 30-வது ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் இன்று கோவையில் நடைபெற்றது.
கோவை ராஜவீதியில் உள்ள தேர்முட்டி திடலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகன்நாதர், சுபத்ரா தேவி, பலதேவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தேரை இஸ்கான் அமைப்பின் மூத்த தலைவர்கள் தவத்திரு பானு சுவாமி, மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. மேலும் கோவை மாநகர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.