வறண்டு வரும் கோவை குளங்கள்


வறண்டு வரும் கோவை குளங்கள்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக கோவையில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன.

கோயம்புத்தூர்

கோவை

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக கோவையில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன.

குளங்கள்

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கோவையில் ஓடி வரும் நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்டு, அதன் இரு கரைகளிலும் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இது தவிர பருவமழை காலங்களில் கிடைக்கும் மழைநீரையும் அந்த குளங்களில் சேகரித்து, ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும், மற்ற தேவைகளுக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது.

மழைப்பொழிவு இல்லை

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு தற்போது வரை பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழைப்பொழிவு இல்லாததால் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள குளங்களில் நீர் இருப்பு குறைந்து விளையாட்டு மைதானங்கள் போன்று காட்சியளிக்கின்றன.

கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்

குறிப்பாக தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நரசாம்பதி குளம், உக்குளம், புதுக்குளம், பேரூர் பெரியகுளம், கோளரம்பதிகுளம், சொட்டையாண்டி குளம் உள்ளிட்ட குளங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் காணப்படுகிறது.

வரத்து இல்லாத நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், அதில் இருக்கும் நீரும் வேகமாக ஆவியாகி வருகிறது. இதனால் பெரும்பாலான குளங்களில் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்துக்கும் கீழ் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன.

பள்ளி தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் குளங்களின் நீர் வற்றியுள்ள பரப்புகளில் சிறுவர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினை

இதற்கிடையே கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதேபோன்று ஆழியார் அணை நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது. அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் கோவையில் பல இடங்களில் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி வருகிறது. கோடை மழை பெய்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story