கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் என்.ஐ.ஏ. அலுவலகம்
கார் வெடிப்பு வழக்கை விசாரிக்க கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் என்.ஐ.ஏ. அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்குகிறார்கள்.
கார் வெடிப்பு வழக்கை விசாரிக்க கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் என்.ஐ.ஏ. அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்குகிறார்கள்.
கார் வெடிப்பு சம்பவம்
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது28) என்ற வாலிபர் பலியானார். இது தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. வந்தனா தலைமையில் அதிகாரி கள் கோவையில் முகாமிட்டு ஆரம்ப கட்ட விசாரணை மேற் கொண்டனர். மேலும் கார் வெடிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.
புதிய அலுவலகம்
கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு 2 அறைகளுடன் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 6 பேர் வந்து விசாரணைக்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டனர். மேலும் கோவை போலீசாரி டம் இருந்து அனைத்து தகவல்களையும் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது குறித்து கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, என்.ஐ.ஏ.விடம் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
மேலும் அவர்கள் விசாரணை நடத்த உதவியாக 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்- இன்ஸ் பெக்டர்கள், 8 போலீசாரை வழங்கி உள்ளோம். இனிமேல் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவையும், உதவியையும் வழங்குவோம் என்றார்.
இன்று முதல் விசாரணை
கோவையில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விசாரணையை தொடங்குகிறார்கள். அவர்கள், கைதான 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிப் பது, கேரளாவுக்கு அழைத்துச்சென்று விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.