கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் வான் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள்
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் வான் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள்
கோவை மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசார் இடையே தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை மேம்படுத்தவும், அனைத்து இக்கட்டான சூழ்நிலைகளிலும் திடமுடன் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு வான்சாகச பயிற்சி (பாராசைலிங் பயிற்சி) அளிக்கும் நிகழ்ச்சி கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஒரு போலீஸ் ஜீப்பில் கயிறுடன் பாராசூட் இணைக்கப்பட்டு இருக்கும். பாராசூட்டுடன் போலீசார் இணைக்கப்பட்டு இருப்பார்கள். போலீஸ் ஜீப்பை வேகமாக இயக்கும் போது பாராசூட் உயரே எழும்பி பறக்க தொடங்கும். அப்போது பாராசூட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும் போலீசாரும் வானில் பறப்பார்கள். இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வான் சாகச பயிற்சியில் கோவை சரக டி.ஜ.ஜி. முத்துசாமி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) சிலம்பரசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பறந்து சாகச பயிற்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் தவிர ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் என 50-கும் மேற்பட்டோரும் இந்த சாகச பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ஒருசிலர் தரையிறங்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த போலீசார் ஓடி சென்று உதவினர். இந்த வான்சாகச பயிற்சி பிரமிப்பாக இருந்தது என்று சாகசத்தில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர்.