கோவை ரெயில் நிலையம் உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும்
கோவை ரெயில் நிலையம் உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கவுதம் சீனிவாஸ் தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவை ரெயில் நிலையம் உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கவுதம் சீனிவாஸ் தெரிவித்து உள்ளார்.
கூட்டம்
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் சரக்கு ரெயில் போக்குவரத்து மேம்படுத்துவது குறித்து தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அவினாசி ரோட்டில் உள்ள இந்திய வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தொழில் வர்த்தக சபையின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ரெயில்வே அதிகாரிகள் ஹரிகிருஷ்ணா, பூபதி ராஜா, ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.சண்முகம், ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கவுதம் சீனிவாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
கோவைக்கு 3 வந்தே பாரத் ரெயில்கள் 2023-24-ம் ஆண்டிற்குள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ரெயில்கள் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து தற்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை 130 கிலோ மீட்டர் வேகமாக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழகத்தில் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்கள் ரூ.100 கோடி முதல் ரூ.700 கோடி வரை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கோவை ரெயில் நிலையமும் உலக தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும்.
மின்சார ரெயில்கள்
சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் முழுவதும் மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. டீசல் என்ஜின் கொண்ட ரெயில்கள் இயக்கப்படுவது இல்லை. மேட்டுப்பாளையம்-திருச்செந்தூர் இடையே ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ரெயிலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும். மேலும் இந்திய அளவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ரெயில் நிலையங்களில் கோவை 6-வது இடம் பிடித்து உள்ளது. இதற்கு பிளாட்டினம் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதுநிலை வணிகபிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் பேசும்போது, குஜராத், சூரத், நாசிக் உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவைக்கு பஞ்சு உள்ளிட்ட சரக்குகள் கண்டெய்னர் மூலம் கொண்டு வரப்படுகின்றன. பம்புசெட் உற்பத்தியில் கோவை முதன்மையாக உள்ளது. ஆனால் கோவை தொழில் அமைப்புகள் தங்களது உற்பத்தி பொருட்களை சரக்கு ரெயில்கள் மூலம் பிற நகரங்களுக்கு அனுப்பவது இல்லை. சரக்கு ரெயில்களை தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். விவசாய பொருட்களை சரக்கு ரெயிலில் அனுப்ப 45 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெயிலில் சரக்கு கொண்டு செல்ல கிலோவிற்கு ரூ.6.34 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார். இந்த கூட்டத்தில் கோவையின் பல்வேறு தொழில் அமைப்புகள், ரெயில்வே ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.