முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்தார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்தார்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.

சென்னை,

அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அ.தி.மு.க. பிளவுபட்ட போது எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்ற நிலையில், அவர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக கருதப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கோவை செல்வராஜூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சில காலம் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்காமல் இருந்து வந்தார். ஒருகட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார். திராவிட பாரம்பரியமுள்ள கட்சியில் தான் சேருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் தி.மு.க.வில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...

இந்தநிலையில் கோவை செல்வராஜ், நேற்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கோவை செல்வராஜூவுடன் நிர்வாகிகள் பலரும் தி.மு.க.வில் இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து கோவை செல்வராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதவாத கட்சிகள் காலூன்ற முடியாது

1971-ம் ஆண்டில் எனது 14-வது வயதில் உதயசூரியன் சின்னத்தில் தி.மு.க.வுக்காக வாக்கு சேகரித்தேன், இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் தி.மு.க.வுக்கு வந்துள்ளேன். ஒரு சுனாமி போல, தமிழகத்தை அழிவுபாதைக்கு கொண்டு செல்வது போல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி இருந்தது. சீரழிந்த தமிழகத்தை மீட்டு, மக்களாட்சி நடத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட வந்திருக்கிறோம்.

கடந்த 4½ ஆண்டு காலம் அ.தி.மு.க.வுக்காக வக்காலத்து வாங்கி பேசியதற்காக மக்களிடம் நான் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அ.தி.மு.க. என்ற கட்சி தற்போது கம்பெனியாகி விட்டது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது. திராவிட பாரம்பரியம் தான் தமிழகத்தை ஆளமுடியும். எந்த மதவாத கட்சியும் இங்கு காலூன்ற முடியாது. மதவாத கட்சி தலைவர்களுக்காக வேலை செய்யும் அ.தி.மு.க. தலைவர்களுடன் இருக்க நான் விரும்பவில்லை. தெளிவான முடிவு எடுத்து தான் தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story