தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும்


தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும்
x

தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.

கோயம்புத்தூர்

தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.

நூற்றாண்டு விழா

கோவையில் உள்ள சுகுணா குழுமத்தின் நிறுவனர் ஜி.ராமசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, இயக்குனர் எல்.சுகுணா ஆகியோர் பேசினார்கள்.

விழாவில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு சுகுணா குழும நிறுவனங்களின் நிறுவனர் ராமசாமி நாயுடுவின் வெண்கல சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றி பெற முடியும்

சுகுணா குழும நிறுவனர் ராமசாமி சிறந்த தொலைநோக்கு சிந்தனை கொண்டவர். அதனால்தான் அவரால் சாதிக்க முடிந்தது. பல்வேறு பகுதிகளில் சிறந்த உழைப்பை கொடுத்து தங்களுக்கு மட்டுமின்றி, தனது சமுதாயத்துக்காகவும் பலர் சேவை செய்து உள்ளனர். அவர்களை நாம் கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டும்.

21-ம் நூற்றாண்டு அறிவுக்கான சகாப்தத்தை கொண்டது. எனவே அறிவாளிகள் மட்டுமே வெற்றி பெற முடியும். அதற்கு நம்மை தயாராக்கி கொள்ள வேண்டும்.

தொழில்துறையின் எதிர்காலம் கோவை

சிறு, குறுந்தொழிலுக்கு கோவை பெயர் பெற்றது. பின்னலாடைக்கு திருப்பூர் புகழ்பெற்றது. இந்த 2 பகுதிகளும் தொழிலில் சாதித்து வருகின்றன. கோவையில் பல்வேறு தொழில்கள் வளர்ந்து வருகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கும் மையமாக கோவை விளங்கி வருகிறது. தகவல் தொழில் நுட்பத்துறையின் எதிர்காலமாக பெங்களூரு இருந்து வருகிறது. அதுபோன்று தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும்.

நாம் செலவிடும் நேரம் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். அடுத்த 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்து அமிர்த சுதந்திர தினத்தை கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். எனவே சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாட நாம் அனைவரும் அடுத்து வரும் 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சுகுணா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அனிஷ்குமார், சாந்தினி, சுகுணா சேரிடபுள் அறக்கட்டளை டிரஸ்டி ராஜாமணி ராமசாமி, கோவை தொழில்வர்த்தக சபை முன்னாள் தலைவர் வி.வரதராஜன், கே.ஜி. குரூப் இயக்குனர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story