மாநில அளவில் கோவை மாணவி சுவாதிஸ்ரீ முதலிடம்
யுபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் கோவையை சேர்ந்த சுவாதிஸ்ரீ முதலிடம் பிடித்து உள்ளார்
கோவை
யு.பி.எஸ்.சி. தேர்வில் மாநில அளவில் கோவையை சேர்ந்த சுவாதிஸ்ரீ முதலிடம் பிடித்து உள்ளார். மேலும் விவசாயிகளுக்கு உதவுவதே லட்சியம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
தேர்வு முடிவு
2021-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. (இந்திய குடிமைப்பணி) எழுத்துத் தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றன.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி சுவாதிஸ்ரீ (வயது 25), அகில இந்திய அளவில் 42-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இவரது தந்தை தியாகராஜன் தொழிலதிபராக உள்ளார். தாயார் லட்சுமி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் ஆவார். சுவாதிஸ்ரீ தனது பள்ளிப் படிப்பை குன்னூரில் முடித்துள்ளார்.
பின்னர் தஞ்சாவூர் தனியார் கல்லூரியில் வேளாண்மை பட்டப் படிப்பை முடித்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
3-வது முயற்சியில் வெற்றி
இவர் தனது 3-வது முயற்சியில் வெற்றி பெற்று உள்ளார். 2-வது தேர்வின் போது வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ். பணி கிடைத்தது. இருப்பினும் அவர் தனது விடா முயற்சியால் இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
அவருக்கு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது எனது சிறு வயதில் முதல் இருந்து வந்த ஆசை. இதற்காக ஏற்கனவே 2-முறை தேர்வு எழுதினேன். 2-வது முறை தேர்வு எழுதிய போது ஐ.ஆர்.எஸ். துறை கிடைத்தது.
இருப்பினும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்தால் கடும் முயற்சி எடுத்து படித்து வந்தேன். 3-வது முறையாக தேர்வு எழுதி தற்போது மாநில அளவில் முதலிடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக வேளாண்மை படித்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்றதும் விவசாயிகளுக்கு உதவுவேன். எனது இந்த வெற்றிக்கு உதவிய ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். சுவாதிஸ்ரீயின் தங்கை பி.டெக். பயின்று வருகிறார்.