350 அடி பள்ளத்தில் குதித்து கோவை மூதாட்டி தற்கொலை


350 அடி பள்ளத்தில் குதித்து கோவை மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2022 2:47 PM GMT (Updated: 29 Aug 2022 4:48 AM GMT)

ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் குதித்து கோவை மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் குதித்து கோவை மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டபெட்டா மலைச்சிகரம்

தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. இது சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. நேற்று வார விடுமுறை என்பதால் மலைச்சிகரத்தில் சுற்றுலா பயணிகள் பலர் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அங்கு அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மூதாட்டி தடுப்பை தாண்டி சென்றார். அங்கு நின்ற சுற்றுலா பயணிகள் அபாயகரமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி கூச்சலிட்டனர். இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து பள்ளத்தில் குதித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூதாட்டி தற்கொலை

தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் தேடினர். பின்னர் மலைச்சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் விழுந்த மூதாட்டி படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை பார்த்தனர். அவரது உடலை மீட்டு தொட்டில் கட்டி மலை உச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், ஊட்டி ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற விசாரணை நடத்தினர்.

இதில் கோவை தடாகம் ராகவேந்திரா நகரை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி லீலாவதி (வயது 62). அவர் கோவையில் இருந்து பஸ் மூலம் ஊட்டிக்கு வந்து உள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு வந்தார். அவர் தற்கொலை செய்யும் முன்பு ஆதார் கார்டை வைத்து விட்டு பள்ளத்தில் குதித்து உள்ளார். இருப்பினும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லீலாவதி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் சுற்றுலா தலத்துக்கு வந்திருந்த பயணிகள் சோகம் அடைந்தனர்.



Next Story