10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய கோவை பெண்


10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய கோவை பெண்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

கோவை வடவள்ளியை சேர்ந்த பெண் 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள குழந்தைகளுக்கு தானமாக வழங்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை வடவள்ளியை சேர்ந்த பெண் 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள குழந்தைகளுக்கு தானமாக வழங்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.

குழந்தைகளின் ஆரோக்கியம்

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். பிரசவத்திற்கு பின்னர் ஒரு சில தாய்மார்களுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக தாய்ப்பால் அதிகம் சுரக்காத நிலை உள்ளது. மேலும் சில குழந்தைகள் உடல் எடை குறைவுடன் பிறக்கின்றனர். மேலும் தாயை இழந்த குழந்தைகள், தொட்டில் குழந்தை, ஆதரவின்றி மீட்கப்படும் குழந்தை உள்ளிட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளின் வசதிக்காக தன்னார்வ அமைப்புடன் இணைந்து தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு பெண்கள் தங்களது தாய்ப்பாலை தானமாக தருகின்றனர். இந்த தாய்ப்பால் சேமித்து பதப்படுத்தப்பட்டு தேவையான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூரை சேர்ந்த ஸ்ரீ வித்யா (வயது 27) என்பவர் கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கி சாதனை படைத்து உள்ளார்.

சாதனை புத்தகத்தில் இடம்

இதுகுறித்து ஸ்ரீவித்யா கூறியதாவது:-

எனது கணவர் பைரவன். எங்களுக்கு அசிந்தியா (4) என்ற மகனும், 10 மாதம் ஆன ப்ரக்ருதி என்ற மகளும் உள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் தினமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றனர். இதில் உடல் நலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படுகிறது. தாய்ப்பால் தானம் குறித்து முதல் குழந்தை பிறந்த போதே தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் அதனை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. இதனால் அப்போது என்னால் தாய்பாலை தானமாக வழங்க முடியாமல் போனது வருத்தத்தை அளித்தது.

இந்த நிலையில் எனக்கு 2-வதாக மகள் பிறந்தார். இந்த குழந்தை பிறந்த 5-வது நாள் முதல் தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன். இதற்கு திருப்பூரை சேர்ந்த தன்னார்வ அமைப்பு நடத்தி வரும் ரூபா செல்வநாயகி பெரிதும் உதவினார். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது. அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது. கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கி உள்ளேன். இதில் கடைசி 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் வழங்கியது இந்திய புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஆசிய ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து உள்ளது.

விழிப்புணர்வு

தினமும் குழந்தைக்கு அளித்தது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை அதற்கு என பிரத்யேகமாக உள்ள பாக்கெட்டில் சேகரித்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவேன். இதனை தன்னார்வலர்கள் வந்து பெற்று, அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அங்கு தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் 'கப்' மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.தாய்ப்பாலை தங்களது குழந்தைகளுக்கு கொடுப்பதாலும், தானம் செய்வதாலும் பெண்களின் அழகு எவ்விதத்திலும் பாதிக்கப்படபோவதில்லை. பதிலாக அவர்களது தாய்மை அழகாகும். தற்போது பெரும்பாலான பெண்களிடம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story