சிறுவனின் உணவு குழாயில் சிக்கியிருந்த நாணயங்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுவனின் உணவு குழாயில் சிக்கியிருந்த நாணயங்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுவனின் உணவு குழாயில் சிக்கியிருந்த நாணயங்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
3 நாணயங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கோவிந்தம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குடியரசு. இவரது மகன் மணிமாறன் (வயது 5). இவன் நேற்று காலை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது 3 நாணயங்களை (காசு) விழுங்கி உள்ளான். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவனை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்தனர். மேலும் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது மேல் உணவு குழாயில் நாணயங்கள் சிக்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உணவு குழாயில் சிக்கியுள்ள நாணயங்களை அகற்ற மருத்துவக்குழுவினர் விரைந்து செயல்பட்டனர்.
எண்டோஸ்கோப்பி முறையில்
இதில் காது, மூக்கு, தொண்டை பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சபரீஸ், முகமதுதாப்ரேஸ், மயக்கவியல் நிபுணர் சீனிவாசன் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப்பி முறையின் மூலம் சிறுவனின் உணவு குழாயில் சிக்கி இருந்த 3 நாணயங்களையும் வெற்றிகரமாக அகற்றினர்.
தற்போது சிறுவன் நலனுடன் உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். சிறப்பான முறையில் செயல்பட்ட மருத்துவ குழுவினரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த், காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவர் அன்பழகன் மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.