தென்னைநார் தொழிலை வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
தென்னை நார் தொழிலை வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கருத்துகேட்பு கூட்டத்தில் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
தென்னை நார் தொழிலை வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கருத்துகேட்பு கூட்டத்தில் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்து கேட்பு கூட்டம்
தென்னைநார் தொழிலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளை, ஆரஞ்சு, பச்சை என 3 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது. இது குறித்து வருகிற 31-ந் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது. இந்த நிலையில் கயிறு சார் பொருள் உற்பத்தியாளர்கள் அசோசியேசன் மற்றும் கயிறு வாரிய மண்டல அலுவலகம் சார்பில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
வெள்ளை நிற பட்டியல்
இதற்கு மத்திய கயிறு வாரிய தலைவர் குப்புராம் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர் சாபு வரவேற்றார். கூட்டத்தில் தென்னை நார் தொழிற்சாலைகள் வெள்ளை நிற பட்டியலில் தொடர செய்ய வேண்டியது, தொழிலில் உள்ள சவால்களை எதிர்கொள்வது, ஏற்ற-இறக்கங்களை சரி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தென்னை நார் உற்பத்தியாளர்கள் மற்றும் கயிறு வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாற்ற வேண்டும்
இதுகுறித்து தென்னைநார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தென்னைநார் தொழில் வெள்ளை நிற பட்டியலில் இருந்தது. தொடர்ந்து புகார்கள் வந்ததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றியது. இதனால் மட்டை விலை குறைந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலில் எந்தவித கெமிக்கலும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே மீண்டும் வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றனர்.