போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக கள்ளக்குறிச்சியை மாற்ற ஒத்துழைக்க வேண்டும்


போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக கள்ளக்குறிச்சியை மாற்ற ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM GMT (Updated: 30 Dec 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தகவல் தெரிவிக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தினால் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக்கடைகளிலும் தூக்க மாத்திரை, வலி மாத்திரைகள் டாக்டரின் பரிந்துரை செய்யாமல் விற்பனை செய்யக்கூடாது. நிபந்தனைகளை மீறி செயல்படும் மருந்துக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விழிப்புணர்வு

போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளிகள், கல்லூரிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) ராஜா, கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி, உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, குற்றவியல் அலுவலக மேலாளர் விஜயபிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், பழனி, போதைப்பொருள் தடுப்பு ஆய்வாளர் கதிரவன் மற்றும் தாசில்தார்கள், வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story