விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்


விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்
x
திருப்பூர்


விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்து பேசினார்கள். முந்தைய கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் 175 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இந்த மாதம் இதுவரை 85.19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது சராசரி செய்ய வேண்டிய மழை அளவை விட அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது.

நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2,240 டன்னும், டி.ஏ.பி. 1,131 டன்னும், காம்ப்ளக்ஸ் 5,103 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 665 டன்னும் இருப்பில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

உடனடியாக தீர்வு

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அளித்த மனுக்களுக்கு கால தாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும் அவர் பார்வையிட்டார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கமாக நடக்கும் கூட்ட அரங்கில் இல்லாமல், விவசாயிகள் நீண்ட நாட்களாக 2-வது தளத்தில் உள்ள பெரிய கூட்ட அரங்கில் நடத்த கோரிக்கை வைத்தனர். நேற்று அந்த கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story