மீண்டும் ஆவணப்படம் எடுக்க மக்களிடம் வசூல்: முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக இணையவழி கையெழுத்து இயக்கம்


மீண்டும் ஆவணப்படம் எடுக்க மக்களிடம் வசூல்:  முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக இணையவழி கையெழுத்து இயக்கம்
x

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக மீண்டும் ஆவணப்படம் எடுக்க கேரளாவில் சிலர் பணம் வசூல் செய்து வருவதோடு, அணைக்கு எதிராக இணையவழி கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகின்றனர்.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2014-ம் ஆண்டு முதல், 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 127.70 அடியாக இருந்தது. இந்த அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த அணையில் பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தப்பட்டு, வல்லுனர் குழுவினர் பல கட்ட ஆய்வுகள் செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினரும் அணையை அவ்வப்போது ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்து வருகின்றனர்.

கையெழுத்து இயக்கம்

ஆனாலும், அணைக்கு எதிராகவும், அணையை இடிக்க வேண்டும் என்றும் கேரளாவில் தொடர்ந்து சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், சில அமைப்புகளை சேர்ந்தவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அணைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக மீண்டும் ஆவணப்படம் எடுக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடம் இருந்து சிலர் பணம் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த அணையை இடிக்கக்கோரி இணையவழி கையெழுத்து இயக்கமும் சிலர் நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு

கடந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த நடிகர்கள் சிலரும் கருத்துகள் தெரிவித்து சர்ச்சையை உருவாக்கினர். அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக, பொய்யான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தமிழக விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

கேரள அரசு அணைக்கு எதிரான கருத்துகளை பரப்புபவர்கள் மீதும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தமிழக, கேரள மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, அணைக்கு எதிராக பொய்யான கருத்துகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Next Story