சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்


சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல் குறித்து வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம் 1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.

அபராதம் உயர்வு

அந்தப் புதிய வாகனச்சட்டத்தின்படி இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உட்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

அலைக்கழிக்கப்படும் நிலை

திருத்தங்கல் மைக்கேல்:-

சிவகாசி பகுதியில் கடந்த சில மாதங்களாக போக்குவரத்து போலீசார் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது ஏதாவது ஒரு வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். முன்பெல்லாம் விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிவு செய்து அதன் பின்னர் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது போலீசார் நின்று இருக்கும் இடத்தை கடந்து சென்றாலே போதும் சிறிது நேரத்தில் நமது செல்போனுக்கு அபராத தொகை குறித்த எஸ்.எம்.எஸ். வந்து விடுகிறது. இலக்கு வைத்து தற்போது அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசி, திருத்தங்கலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதில் மட்டும் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். சிவகாசி பகுதியில் அவசர தேவைக்கு கூட இரவு நேரங்களில் வெளியே செல்ல முடிவதில்லை. விசாரணை என்ற பெயரில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது.

அபராதம்

காரியாபட்டியை சேர்ந்த வக்கீல் கவியரசன்:- காரியாபட்டி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வாழும் மக்கள் அதிகம் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இந்த பகுதி மக்கள் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்க அவசரமாக காரியாபட்டிக்கு தான் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ஹெல்மெட், இன்சூரன்ஸ், ஆர்.சி. புக் இல்லை என்றால் அபராதம் விதிக்கின்றனர். ஒரு சில நேரங்களில் விவசாயிகள் அவசரத்திற்கு வரும் போது ஹெல்மெட் அணிவதில்லை. அவசரமாக வந்துவிட்டோம் என்று காரணத்தை தெரிவித்தாலும் போலீசார் விடாமல் அபராதத்தை விதித்து விடுகின்றனர்.

ஒருமுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து பின்னர் அபராதம் விதிக்க வேண்டும். மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது கண்டிப்பாக அபராதம் விதிக்கலாம். ஆனால் மதுக்கடை இருக்கும் சிறிது தூரத்திலேயே நின்று கொண்டு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.

தொழிலாளி பாதிப்பு

ஆர்.ஆர். நகர் பால் உற்பத்தியாளர் பாலமுருகன்:-

விருதுநகர் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக வாகன விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்து அபராதம் விதித்து வருகிறார்கள். பட்டாசு தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளி, பால் விற்பனையாளர் போன்று அன்றாடம் பிழைக்கும் ஊதியத்தை கொண்டு வீடு திரும்பும் தொழிலாளர்கள் மீது அபராதம் என்ற பெயரில் அவர்களது ஊதியத்தை வசூலித்துக் கொள்கிறார்கள். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் போலீசார் கடுமையாக நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

விதிமீறல் என்பது தவறு தான். அதை முறையாக அவர்களுக்கு அறிவுறுத்தி எச்சரிப்பது நல்லது. ஆனால் உடனடியாக அபராதம் விதிப்பதற்கான காரணம் அவர்களுக்கும் வேறு ஏதும் நிர்பந்தம் உள்ளதோ என எண்ண வேண்டியுள்ளது. எனவே இந்த நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


இலக்கு எதுவும் இல்லை

போலீஸ் சூப்பிரண்டு மனோகர்:-

பொதுவாக இருசக்கர வாகன விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. அந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அபராதம் வசூலிப்பதற்கான இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விபத்துக்களால் உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

அந்த வகையில் மாவட்டத்தில் எந்த பகுதியில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறதோ அந்த பகுதியில் முறையாக கண்காணித்து வாகன விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை. வாகனங்களில் சொல்வோர் முறையாக வாகன விதிகளை கடைபிடித்தால் அவர்களுக்கும் நல்லது, சாலைகளில் செல்லும் பொது மக்களுக்கும் நல்லது. இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளும் தவிர்க்கப்படும்.


Next Story