மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுத்தருவதாக பணம் வசூல்


மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுத்தருவதாக பணம் வசூல்
x

மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பெற்றுத்தருவதாக கூறி, பண வசூலில் ஈடுபட்டவர்களை பா.ஜ.க.வினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் வீடு, வீடாக சென்று மத்திய, மாநில அரசின் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பெற்றுத்தருவதாக கூறி கிராம மக்களிடம் தலா ரூ.150-ஐ நேற்று முன்தினம் வசூலித்ததாக தெரிகிறது. மேலும் கிராம மக்களிடம் ஆதார் அட்டை எண், புகைப்படம் ஆகியவற்றையும் அவர்கள் சேகரித்தனர். இவர்களுக்கு 90 நாட்களில் தபால் மூலம் காப்பீடு திட்ட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்று கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், அந்த கட்சியினர் அங்கு சென்று தனியார் ஊழியர்களை பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக கூம்பூர் போலீசாருக்கு பாரதீய ஜனதா கட்சியினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அனுமதியின்றி தனியார் நிறுவன ஊழியர்கள் கிராம மக்களிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரியை, நாளை (திங்கட்கிழமை) கூம்பூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் எதிரொலியாக, மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கு தகவல் சேகரிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story