பண மோசடி செய்த கோவை தம்பதியின் சொத்து விவரம் சேகரிப்பு


பண மோசடி செய்த கோவை தம்பதியின் சொத்து விவரம் சேகரிப்பு
x

பலரை ஏமாற்றி பண மோசடி செய்த கோவை தம்பதியின் சொத்து விவரங்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்

கோயம்புத்தூர்

கோவை

பலரை ஏமாற்றி பண மோசடி செய்த கோவை தம்பதியின் சொத்து விவரங்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஆன்லைன் நிறுவனம்

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 37). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (35). இவர்கள் யூ-டியூப் சேனல் தொடங்கி பொதுமக்களிடம் அறிமுகமாகினர்.

விமல் குமார் லண்டனில் தான் தொடங்கி உள்ள ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவித்தார்.

அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் அசல் தொகை ரூ.10 ஆயிரம், வட்டி ரூ.8 ஆயிரம் என 10 மாதத்தில் முதலீட்டு தொகையுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி தரப்படும் என்று கூறப்பட்டது.

மோசடி புகார்

அதை நம்பி கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்களிடம் பணம் வசூலிக்க விமல்குமார் ஏஜெண்டுகளை நியமித்துள்ளார்.

ஆனால் விமல்குமார் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வில்லை. இதனால் தங்களது பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

சொத்து விவரம்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விமல்குமார் மற்றும் அவரது மனைவியின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை சேகரிக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்த விமல்குமார், ராஜேஸ்வரி தம்பதி வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே அவர்களை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

யூ-டியூப் சேனல்

மேலும் அவர்களின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை சேகரித்து வருகிறோம். இது குறித்து கோவை சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம். தற்போது வரை அவர்களது யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. அதை முடக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story