தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
தர்மபுரி டவுன் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் 2-ம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி தர்மபுரி டவுன் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கான மைய சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளதையும், இதற்காக வாங்கப்பட்ட சமையல் பாத்திரங்களையும் கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, தர்மபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 111 தொடக்க பள்ளியில் பயிலும் 5400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1013 அரசு தொடக்க பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 51,538 மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமையல் பாத்திரங்கள்
இந்த திட்டத்திற்கென புதிதாக சமையல் பாத்திரங்களின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக தர்மபுரி நகராட்சி டவுன் பள்ளி வளாகத்தில் புதிய சமையல்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மற்ற பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி எடுத்துச் சொல்ல சமையல் பாத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனந்தராமன், விஜயரங்கன், சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.