வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்109 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மானியம்கலெக்டர் உமா தகவல்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 109 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் மானியம் வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்தார்.
கருத்தரங்கு
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டம் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கி 3 சேவை வங்கிகளுக்கு பரிசுகளையும், 9 பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் இணை மானிய நிதி விடுவிப்பதற்கான ஆணையையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இணை மானிய திட்டமானது நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 4 வட்டாரங்களை உள்ளடக்கிய 87 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.1.35 கோடி மானியம்
இத்திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் தாங்கள் தொடங்கும் அல்லது விரிவுபடுத்தக்கூடிய தொழிலுக்கான கடனை 30 சதவீத மானியத்துடன் பெற முடியும். 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள், மகளிர் குழு குடும்ப உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் இக்கடன் பெற ஏதுவான பயனாளிகள் ஆவார்கள். தற்போது இதுவரை இந்த இணை மானிய திட்டத்தில் 13 வங்கிகள் இணைந்து, இக்கடனை தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் வழங்கி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 109 பயனாளிகள் இணை மானியத் திட்டத்தின் மூலம் கடன் பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்தி வருகிறார்கள். இந்த பயனாளிகள் அனைவருக்கும் ரூ.1 கோடியே 35 லட்சம் மானியமாக மாநில அலுவலகத்தில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. கடன் பெறுவது மட்டுமில்லாமல் கடனை திரும்ப செலுத்துவதிலும் உரிய ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
இக்கருத்தரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிரியா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், வங்கியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.