தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக கொடுத்தனர். அடிப்படை பிரச்சினை, உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக நேற்று 714 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் ஒரு நபருக்கு தூய்மைப்பணியின்போது ஒரு கை பாதிக்கப்பட்டதால் நிவாரண உதவியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். 8 தூய்மைப்பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான உத்தரவுகளையும் அவர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி புஷ்பாதேவி, தாட்கோ மேலாளர் ரஞ்சித்குமார், தூய்மைப்பணியாளர் துணைத்தலைவர் கனிமொழி, நலவாரிய உறுப்பினர் மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.