சூளகிரி அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்க தடை விதிக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
சூளகிரி அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சூளகிரி அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சிப்காட்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அட்டக்குறுக்கி மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் 3-வது சிப்காட் அமைக்க 2,800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதில் அட்டக்குறுக்கியில் நிலை 4-ல் 231 ஏக்கர் பட்டா நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து நில உரிமையாளர்களுடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் தங்கள் நிலங்களை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நில எடுப்புக்கு தடை விதிக்க கோரி மனுவும் அளித்தனர். பின்னர் இதுகுறித்து விவசாயிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடை விதிக்க வேண்டும்
நாங்கள் பல தலைமுறைகளாக எங்கள் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். அதைதவிர வேறு தொழில் எங்களுக்கு தெரியாது. தமிழக அரசு திடீரென எங்கள் நிலங்களை கையகப்படுத்தினால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகும் சூழ்நிலை உள்ளது. எங்கள் நிலங்களை கையகப்படுத்தும் அரசு, அதற்குரிய தொகையை வழங்காமல் குறைந்த தொகை வழங்குகிறார்கள்.
அந்த தொகையை வைத்து சென்ட் அளவில் கூட நிலம் வாங்க முடியாது. எனவே எங்கள் நிலங்களை சிப்காட்டுக்காக நிலஎடுப்பு செய்வதை தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்கள்.