நாமக்கல் மாவட்டம் முழுவதும் பணிக்கு அமர்த்திய குழந்தை தொழிலாளர்கள் உள்பட 29 சிறுவர், சிறுமிகள் மீட்பு கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டம் முழுவதும் பணிக்கு அமர்த்திய  குழந்தை தொழிலாளர்கள் உள்பட 29 சிறுவர், சிறுமிகள் மீட்பு  கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:45 PM GMT)

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பணிக்கு அமர்த்திய குழந்தை தொழிலாளர்கள் உள்பட 29 சிறுவர், சிறுமிகள் மீட்பு கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 29 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறினார்.

29 சிறுவர், சிறுமிகள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் உட்கோட்டம் மற்றும் திருச்செங்கோடு உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் வருவாய்துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் மற்றும் போலீசார் இணைந்து நேற்று குழந்தை தொழிலாளர்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 29 சிறுவர், சிறுமிகளை அதிகாரிகள் குழுவினர் மீட்டனர்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் நிருபர்களிடம் கூறியதாவது :-

இந்த ஆய்வின்போது முத்துகாபட்டியில் உள்ள செங்கல் சூளையில் 16 வயதுடைய 2 ஆண் வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். இதேபோல் படைவீடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த 13 வயதுடைய 2 பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் 20 பெண் வளரிளம் பருவத்தினர், 5 ஆண் வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்ட 29 சிறுவர், சிறுமிகளும் பாதுகாப்பு நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

நிறுவனங்கள் மீது வழக்கு

இந்த நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்தல் போன்ற தொடர் நடவடிக்கைகள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியபின் அவர்களது விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை. மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின் கீழ் அனுமதி பெறவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள், நூற்பாலைகள், உணவு நிறுவனங்கள், வாகனம் பழுது பார்க்கும் பணிமனைகள், டெக்ஸ்டைல்ஸ், திருமண மண்டபங்கள் மற்றும் அனைத்து தொழில் இடங்களிலும் தொடர் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ.20 ஆயிரம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story