நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார்
நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார்
நாமக்கல்லில் நடந்த பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பங்கேற்று பரிசு வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்கள்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அதேபோல் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதன் பிறகு தொடர் ஜோதியை கலெக்டர் ஸ்ரேயா சிங், ஈரோடு மாவட்ட சுகாதார துறையினரிடம் வழங்கினார்.
பங்கு முக்கியமானது
பின்னர் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா காலத்தை கடந்து தற்போது பலர் வாழ்ந்து வருவதற்கு சுகாதாரத்துறை களப்பணியாளர்களின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்ததாகும். இது ஒரு கூட்டு முயற்சியாகும். சின்னம்மை, போலியோ, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து வருவதில் சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் பங்கு முக்கியமானதாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் ராஜ்மோகன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரபாகரன், ஜெயந்தினி, வாசுதேவன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.