ஏரியூர், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


ஏரியூர், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங்களில்  வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:45 PM GMT)

ஏரியூர், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

தர்மபுரி

ஏரியூர், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் தொன்னகுட்ட அள்ளி ஊராட்சியில் சந்தோஷ்மணி என்பவர் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சத்தில் புதிய வீடு கட்டும் பணி, இதே ஊராட்சியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் தொன்னகுட்ட அள்ளி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைகளின் எடை, உயரம், அவர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.

மரக்கன்றுகள்

அங்கன்வாடி மையத்தில் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் உணவின் பட்டியல் விவரம் மற்றும் தரம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டதோடு, குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை அரசின் பட்டியலின்படி நாள்தோறும் தவறாமல் நல்ல முறையில் சமைத்து வழங்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் பருவதனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21.80 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு, அதில் ரூ.11.76 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணிகளையும், பிளியனூர் ஊராட்சி நாகதாசம்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் கலெக்டர் கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டங்கள்

அப்போது கலெக்டர் கூறுகையில், தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிற அனைத்து வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய அரசு அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றுவதோடு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், மீனா, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன், உதவி பொறியாளர்கள் சீனிவாசன், இளவேணி, சாந்தி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story