சிறுபான்மையின கைவினை கலைஞர்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
சிறுபான்மையின கைவினை கலைஞர்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினை கலைஞர்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
கடன் உதவி
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர்களது மூலதன சேவையை பெற்று தொழிலை மேம்படுத்திட குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதில் திட்டம்-1 கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இதேபோல் திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் சமூகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடன் உதவி பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்களை பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.