கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில்அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில்அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

வருகை பதிவேடு

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். அங்கன்வாடியில் பயிலும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை, சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவு விவரங்கள், அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறதா என கலெக்டர் கேட்டறிந்தார்.

கான்கிரீட் சாலை

பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.90 லட்சத்தில் சமையல் அறையுடன் கூடிய சமுதாய கூடம் அமைக்கும் பணி, ஊரக வேலை திட்டத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளாபாளையத்தில் ரூ.20.57 லட்சத்தில் மயானம் அமைக்கும் பணி, மாரியம்மன் கோவில் அருகில் ரூ.3.30 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அங்கன்வாடி மையம்

பின்னர் வி.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளிடம் கேட்டறிந்தார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வரும் பகுதிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், சங்கர், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், ஊராட்சி செயலர் பொன்னுவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story