அனைத்து ஊராட்சிகளிலும்இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு


அனைத்து ஊராட்சிகளிலும்இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமத்துவ பொங்கல்

தமிழ்நாட்டில் தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாசார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தை திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசின் ஆணைப்படி இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.

இதில் ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.

சுகாதார பொங்கலை முன்னிட்டு ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும். கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசு வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

கோலப்போட்டி

சமத்துவ பொங்கலை முன்னிட்டு அனைத்து ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்றுகூடி தங்களுக்குள் சமத்துவ உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும். சமத்துவ கருத்துகளை வலியுறுத்தும் வகையில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு அனைத்து பெண்களின் ஒற்றுமை உணர்வை வளர்க்க செய்ய வேண்டும்.

மேலும் 2023-ம் ஆண்டில் மகளிர் நிலை, வரதட்சணை கொடுமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சிசுவதை சமூக இணக்கம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, குடிநீர் பிரச்சினை, இடம் பெயர்தல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், சமூக பிரச்சினைகளில் சுய உதவிக்குழுக்களின் தாக்கம், வறுமை, கல்வியறிவின்மை மற்றும் கிராம பகுதிகளில் பெண்களுக்கு நேரிடும் பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள செய்ய வேண்டும்

அனைவரும் சமூக வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கொருவர் அன்பையும், சமூக நல்லிணக்கத்தையும் பரிமாறி கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்தின் அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழாமிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story