நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில்2-ம் கட்டமாக 3,694 மாணவிகளுக்கு உதவித்தொகைகலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில்2-ம் கட்டமாக 3,694 மாணவிகளுக்கு உதவித்தொகைகலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக 3,694 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.

புதுமைப் பெண் திட்டம்

பெண் கல்வியை போற்றும் விதமாகவும், பெண்களுக்கு உயர்கல்வியை உறுதி செய்யும் வகையிலும் கடந்த 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், இளம்வயது திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை அரசின் நோக்கம் ஆகும்.

3,694 மாணவிகள்

இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 6,525 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் 2-ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையொட்டி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப் பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 3,694 மாணவிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 50 மாணவிகளுக்கு வங்கி அட்டைகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story