தர்மபுரியில்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்ஆணையர், கலெக்டர் வழங்கினர்
தர்மபுரி:
தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், கலெக்டர் சாந்தி ஆகியோர் வழங்கினர்.
விளக்க கூட்டம்
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் கீழ் அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி ஜோதி மகாலில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளின் திட்டங்களை செயல்படுத்த சென்னை, கடலூர், தர்மபுரி, திருச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்து. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடைகோடியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவில் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்து நலத்திட்டங்கள் செயல்படுத்துதல், இ-சேவை மையங்கள் துணையுடன் மற்ற துறைகளின் சேவைகளையும் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி சமுதாய அளவிலான திட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவை அடங்கும் என்னு பேசினார்.
ஸ்கூட்டர்கள்
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை கலெக்டர் சாந்தி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வழங்கினர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குனர் ஜெயசீலா, துணை இயக்குனர் சரளா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக உரிமைகள் திட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.