கிருஷ்ணகிரி மாவட்டத்தில்திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்கலெக்டர் அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி, மாவட்ட கருவூலம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ராயக்கோட்டையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் உடையாண்டஅள்ளி கிராமத்தில் அமைப்பதற்கு நில மாறுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கழிவுநீர் கால்வாய்
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சூளகிரி தாலுகாவில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலக வளாக பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது. அவற்றை அகற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது.
வருவாய் துறை சார்பில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் பொது கட்டிட உரிமங்கள் உரிய காலத்திற்குள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.
திட்டப்பணிகள்
மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு மருத்துவமனைக்கு வெளியே கட்டணம் செலுத்தி வாகனம் நிறுத்தம் அமைத்திடவும், கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களை பணியமர்த்துதல் குறித்தும், கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு அஞ்சல் நிலைய கிளை தொடங்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கார்க், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு மற்றும் அனைத்து துறை மாவட்ட முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.