தொழிலாளர் தினத்தையொட்டி251 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்லளிகத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு


தொழிலாளர் தினத்தையொட்டி251 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்லளிகத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் தொழிலாளர் தின கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. லளிகம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.

கிராமசபை கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர் கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும் சுத்தமான குடிநீர் வினியோகம், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை, ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான் முதல்வன் திட்டம் மற்றும் இதரவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுதிமொழி ஏற்பு

இதையொட்டி நல்லம்பள்ளி ஒன்றியம் லளிகம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தலைமையில் எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் என்ற உறுதிமொழியை பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹி முகமது நசீர், பயிற்சி உதவி கலெக்டர் செந்தில்குமார், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் புனிதம் பழனிசாமி, ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், தாசில்தார் ஆறுமுகம், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story