பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்-கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்-கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்


மோகனூர்:

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

கிராம சபை கூட்டம்

மோகனூர் ஒன்றியம் பேட்டபாளையம் ஊராட்சி மணியங்காளிப்பட்டியில் தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது:-

நடவடிக்கை

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் 100 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் தேவைகளை அறிந்து, தங்கு தடையின்றி விரைவாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி

தொடர்ந்து கலெக்டர் தலைமையில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் சுகாதார உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார். பின்னர் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சுகாதார விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியப்பன், மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story