குடியிருப்பு பகுதிகளில்பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் 1,098 எண்ணில் தெரிவிக்கலாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் 1,098 என்ற இலவச சேவை எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளி செல்லா குழந்தைகள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை வீடு வாரியாக கணக்கெடுப்பு செய்வது தொடர்பான மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசியதாவது :-
நாமக்கல் மாவட்டத்தில் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி முறையாக பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்து பள்ளிக் கல்வியை முடிக்க செய்தல் வேண்டும்.
விடுபடாமல் கண்டறிய வேண்டும்
தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும். இத்துடன் பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருந்து இடைநிற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளும் இதில் அடங்கும். பள்ளியே செல்லாக் குழந்தைகள், 8 -ம் வகுப்பு முடிக்காமல் இடைநின்ற குழந்தைகள் என அனைவரும் பள்ளிக்கு வெளியே உள்ளவர் ஆவார்கள்.
அரசாணையின்படி 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்றோரை கண்டறிந்து பள்ளிகளில் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும். பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு செய்ய மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும், எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வாரியாக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற வேண்டும்.குறிப்பாக இடம் பெயர்ந்த குடும்பத்தை சார்ந்த 6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை மிக சரியாக எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும்.
செயலியில் பதிவேற்றம்
கட்டுமான பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, நூற்பாலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் தொழில் நிமித்தமாக வருகின்றனர். வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரெயில் நிலையம், பஸ்நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் பள்ளிச்செல்லா குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இக்கணக்கெடுப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள் அனைவரும் ஈடுபட வேண்டும். மேலும் கணக்கெடுப்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் கணக்கெடுப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் எவரேனும் கண்டறியப்படின் 1098 என்ற இலவச சேவை எண்ணிற்கு அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளமையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செல்வகுமரன், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.