தேவாலயங்கள், மறுவாழ்வு இல்ல பணியாளர்கள் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


தேவாலயங்கள், மறுவாழ்வு இல்ல பணியாளர்கள் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள், மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நல வாரியம்

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் போதகர்கள், வேதியர்கள், சீஷர்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லம் மற்றும் தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்டோரின் சமூக பொருளாதாரம், கல்வி மேம்பாட்டிற்காக நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட கத்தோலிக்க திருச்சபை, அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டண்ட் திருச்சபை ஆயர்கள், சினாட் ஆப் பெந்தகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை

இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பிற அமைப்புசாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். இதன்படி கல்வி உதவித்தொகை, விபத்து மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் உதவித்தொகை, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் அதன் தன்மைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story