கிருஷ்ணகிரியில் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது
கிருஷ்னகிரியில் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது.
காலை உணவு திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட மேலாண்மை அலகு சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
இதையடுத்து கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 133 பள்ளிகளில் 7 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.
1,252 பள்ளிகள்
தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஊரக பகுதிகளில் 1,217 பள்ளிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 35 பள்ளிகளிலும் என மொத்தம் 1,252 பள்ளிகளில் உள்ள 67 ஆயிரத்து 470 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஜூன் மாதம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, கெலமங்கலம் மற்றும் தளி ஒன்றியம், பேரூராட்சிகளிலும், 2-ம் கட்டமாக ஜூலை மாதம் ஊத்தங்கரை, மத்தூர், காவேரிப்பட்டணம் மற்றும் ஓசூர் ஒன்றியம், பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது என்றார். இதில் உதவி கலெக்டர் வந்தனா கார்க், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் ஜாகீர் ்உசேன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.