பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடம் விழிப்புணர்வுஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடம் விழிப்புணர்வுஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசினார்.

ஆய்வுக்கூட்டம்

தர்மபுரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 15-வது நிதிக்குழு மூலம் 2022-2023-ம் நிதியாண்டிற்கான பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடையே துறை வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இந்த திட்டத்திற்காக தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.30 லட்சம் நிதியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறைக்கு என நிதி ஒதுக்கீடு துறை ரீதியாக பிரித்து வழங்கப்படும். அதற்கான செயல் திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

முக்கியத்துவம்

தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். மாவட்டம் முழுவதும் உள்ள மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர் மற்றும் ஏழை மக்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவத்தை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சி ராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், பழங்குடியினர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story