போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறநூலகங்களுக்கு 20 தலைப்புகளில் பொதுஅறிவு புத்தகங்கள்கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் போட்டித்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு பொது அறிவு புத்தகங்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
பொது அறிவு புத்தகங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் போட்டி தேர்வுகளை எழுத தங்களை தயார்படுத்தி கொள்ளும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டரின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி 20 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்களை 5 நூலகங்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனி தேவி முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இந்த புத்தகங்கள் வள்ளல் அதியமான் கோட்டம் நூலகம், அரூர் இந்தியன் ஜிப்ஸி நூலகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் பாப்பாரப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி நூலகம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டன. இதேபோல் சித்தேரி கிராமப்புற ஊராட்சி நூலகம், கலசப்பாடி கிராமப்புற ஊராட்சி நூலகம் ஆகியவற்றிற்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன கால இந்தியா, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராக பயன்படுத்தும் புத்தகங்கள், இந்திய பொருளாதாரம் குறித்த புத்தகங்கள், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான புத்தகங்கள் உள்பட 20 தலைப்புகளில் வழங்கப்பட்ட இந்த பொது அறிவு புத்தகங்களை மாணவ, மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்தார்.