தர்மபுரி ஜமாபந்தி 2-வது நாளில்42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரியில் நடந்த ஜமாபந்தி 2-வது நாளில் கோரிக்கை மனுக்கள் கொடுத்த உடன் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
ஜமாபந்தி
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் கிருஷ்ணாபுரம் உள்வட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம், புளுதிக்கரை, ஆண்டிஅள்ளி, கொண்டம்பட்டி, கோணங்கிநாயக்கனஅள்ளி, வெள்ளாளப்பட்டி, அக்கமணஅள்ளி, நாய்க்கனஅள்ளி, வெள்ளோலை, மூக்கனூர், திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கோடுஅள்ளி ஆகிய 14 வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் நடைபெற்றது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 665 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றது. வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவி
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேற்றைய தினம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை உடனடியாக ஆய்வு செய்தனர். அவ்வாறு கோரிக்கை மனுக்கள் கொடுத்த உடனே 42 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டாக்கள், பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதிய தொகைகள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.