நாமக்கல்லில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; கலெக்டர் உமா அறிவுறுத்தல்
நாமக்கல்லில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டர் உமா அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட தும்மங்குறிச்சி, பெரியகுளம், கிருஷ்ணாபுரம், காவெட்டிப்பட்டி, போதுப்பட்டி, முல்லைநகர், கொசவம்பட்டி, முதலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் உமா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதன் தொடக்கமாக அவர் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் தும்மங்குறிச்சி செம்மண் குளத்தினை மேம்படுத்தும் பணியினையும், ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பெரியூர் குளம் தூர்வாரி மேம்படுத்தும் பணியினையும், ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் குளத்தினை தூர்வாரி கரையினை பலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதிய பஸ்நிலைய கட்டுமான பணி
மேலும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் காவெட்டிப்பட்டியில் பூங்கா அமைக்கும் பணியினையும், முல்லை நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட நாமக்கல் நகராட்சி போதுபட்டி, கொசவம்பட்டி நகர்புற நலவாழ்வு மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, மருந்துகள் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நாமக்கல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை உரப்பூங்காவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.7 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும், உயிரி அகழாய்வு (பயோமைனிங்) திட்டத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நாமக்கல் நகராட்சி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டரங்கில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்களுடனான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
அடிப்படை தேவைகள்
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது :-
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட கூடியவர்கள். அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நகராட்சி அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும். நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் சுகுமார், நாமக்கல் தாசில்தார் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.