தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள் நடும் பணி
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் நட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தர்மபுரி தொழில் மையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளின் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பருவமழை தொடங்கும் முன்...
இதையடுத்து கலெக்டர் கூறுகையில், இந்த திட்டம் மூலம் நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும். பருவமழை தொடங்கும் முன்பு இந்த மரக்கன்றுகள் நடும் பணிகளை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இதில் தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜி, உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், தாசில்தார் ஆறுமுகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.