தர்மபுரி அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்; கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது


தர்மபுரி அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்; கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 17 Jun 2023 7:00 PM GMT (Updated: 18 Jun 2023 1:32 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

அரசு மாதிரி பள்ளி

தர்மபுரி மாவட்ட அரசு மாதிரி பள்ளி தர்மபுரி விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அரசு மாதிரி பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த வகுப்பறை வசதி, தங்கும் விடுதி, சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு பயிற்சி

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த ஆசிரிய, ஆசிரியைகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ், ஆங்கில வழிகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த மாதிரி பள்ளியில் படித்த மாணவர்கள் தேசிய அளவிலான பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனர். பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளில் பங்கேற்கவும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே அனைத்து தரப்பு மாணவர்களும் மாதிரி பள்ளியில் சேர்வதன் மூலம் பயன்களை பெற முடியும்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அடைவதற்கு சிறப்பான கல்வியை கற்க வேண்டும். இதற்கு பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல், கணித ஆசிரியர் பாலமுருகன் ஆசிரிய, ஆசிரியைகள், கல்வித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story