தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்; அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்; அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 19 Jun 2023 6:24 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தேவையான அனைத்து பேரிடர் பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் போதுதாழ்வான பகுதிகளின் விவரப்பட்டியல், அவசர கால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து ஊர்திகளின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப்பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குடிநீர் வினியோகம்

சமுதாயக்கூடங்கள, திருமண மண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தேவையான வாகனங்கள், தண்ணீர் டேங்குகள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், கியாஸ் அடுப்புகள், ரேஷன் கடைகளில் தேவையான உணவு பொருட்களின் இருப்பு ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

சாலையோர மரங்கள் சேதமடைந்தால் மீட்பு பணிக்கு ஜேசிபி, புல்டோசர், மரங்களை வெட்டும் எந்திரங்கள், போர்டபில் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட் நல்ல நிலையில் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் முன்கூட்டியே சீர்படுத்த வேண்டும். அணைக்கட்டுகள், ஏரிகளின் கரைப் பகுதியில் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைக்கவேண்டும்.

முழு ஒத்துழைப்பு

மருத்துவ குழுக்கள், அவர்களின் தொலைபேசி எண் விவரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.மழைக்காலம் தொடங்கும் முன்னரே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கா வண்ணம் தெருச்சாலைகள் சீர்படுத்த வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இந்த நேரங்களில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர்கள் கீதாராணி, ராஜசேகரன் மற்றும் தாசில்தார்கள், அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story