மாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் நடவடிக்கை


மாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் நடவடிக்கை
x

மாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் ராகுல்நாத் நடவடிக்கை மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் ராகுல்நாத் நடவடிக்கை மேற்கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்து அவமதிக்கப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினி (வயது 23) சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு அந்த பெண் வசிக்கும் மாமல்லபுரம் பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்புக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந்தேதி வருகை தந்து அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி, அங்கு வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கடன், குடியிருப்பு கட்ட வீட்டு மனை பட்டா, பாசிமணி விற்க மாமல்லபுரத்தில் கடை ஏற்பாடு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிவிட்டு சென்ற நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் யாரும் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டதாக கூறி அஸ்வினி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, அதிகாரிகளால் தங்களுக்கு நேர்ந்த அவமானங்கள், துயரங்கள் குறித்து வீடியோவில் பதிவிட்டு அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர்.

நரிக்குறவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கிவிட்டு சென்ற நலத்திட்ட உதவிகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வந்தார். அங்கு வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகளை அழைத்து இது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் நரிக்குறவர்களுக்கு முதல்கட்டமாக வங்கி கடனுதவி, பாசிமணிகள் விற்க கடைகள், வீட்டுமனை பட்டா போன்றவற்றை நடைமுறை படுத்தி உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தார். பிறகு முதல் கட்டமாக நேற்று நரிக்குறவர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வங்கி கடன், 3 பேருக்கு கடற்கரை சாலையில் பாசிமணி விற்க பேரூராட்சி கடைகள் ஒதுக்கி உத்தரவிட்டு அதற்கான ஆணைகளை வழங்கி நடைமுறைப்படுத்தினார்.

அதேபோல் பூஞ்சேரியில் உள்ள இடத்தில் 22 நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டாவும் உடனடியாக வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு உடனடியான வங்கி கடன் பெறுவதற்கான ஆணை மற்றும் கடற்கரை சாலையில் பாசிமணி விற்க கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை பேரூராட்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ராகுல்நாத் நரிக்குறவ பெண் அஸ்வினி மற்றும் சில நரிக்குறவர்களுக்கு வழங்கினார்.


Next Story