குழந்தைகளிடம் ஆபாச படங்களை காட்டினால் போக்சோ சட்டத்தில் கைது


குழந்தைகளிடம் ஆபாச படங்களை காட்டினால்   போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Oct 2022 6:45 PM GMT (Updated: 19 Oct 2022 6:46 PM GMT)

குழந்தைகளிடம் ஆபாச படங்களை காட்டினால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்தார்.

ராமநாதபுரம்

குழந்தைகளிடம் ஆபாச படங்களை காட்டினால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியருக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- மாணவர்கள் போதை பொருளின் தீமைகளை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். அதன் தீமைகளை உணர்ந்து அதனை பயன்படுத்த கூடாது. மேலும் அவற்றின் பயன்பாட்டினை தடுக்கவும் முன்வர வேண்டும். போதைப் பொருள்களின் பயன்பாட்டினால் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கி உயிரிழப்பு ஏற்படும்.

போக்சோவில் கைது

மாணவர்கள் படிப்பை தவிர தவறான வழிகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. போதை பொருட்கள் ஒருவரின் மனநிலையை கடுமையாக பாதிக்கும். பாலியல் எண்ணத்துடன் ஒரு குழந்தையிடம் பேசுவது, ஆபாசமான படங்களை காண்பிப்பது, குழந்தைகளை ஆபாசமாக படம் எடுப்பது இவை அனைத்தும் தொடுதல் இல்லாமல் நடக்கும் பாலியல் வன்கொடுமையாகவும், இவை அனைத்தும் போக்சோ சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது போன்ற தவறுகளில் ஈடுபட்டால் உடனடியாக போக்சோவில் கைது செய்யப்படுவார்கள். ஒருவரின் அனுமதியின்றி தவறான முறையில் தொடுவது குற்றமாகும். இதுபோன்ற செயல்கள் நடந்தால் உங்களின் விருப்பமுள்ள ஆசிரியர்கள் அல்லது தலைமை தலைமை ஆசிரியரிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

முன்னேற வேண்டும்

மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களை விருப்பத்துடனும் மற்றும் விருப்பம் இல்லாமலும் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் காயத்திரி, சைல்டுலைன் இயக்குனர் பூமிநாதன், தலைமையாசிரியர் ஞானலெட் சொர்ணகுமாரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story