நெடுஞ்சாலை துறை சார்பில் ஊட்டியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி-கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
நெடுஞ்சாலை துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
நெடுஞ்சாலை துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள் நடும் திட்டம்
நீலகிரி மாவட்டம், தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுவீடு கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1,000 மரக்கன்றுகள்
இதன் தொடர்ச்சியாக தற்போது நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்திகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் மகாகனி மரக்கன்றுகள், நாவல் மரக்கன்றுகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வளரக்கூடிய மரக்கன்றுகள் என மொத்தம் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும். தனி நபர்களும் மரம் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜூ, உதவி பொறியாளர் ஸ்டாலின், தாசில்தார் ராஜசேகர், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.