கலெக்டர் அருண்தம்புராஜ்நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்


கலெக்டர் அருண்தம்புராஜ்நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:46 PM GMT)

கடலூரில், நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

கடலூர்

கடலூரில், நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்

இந்தியா முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதன்பிறகு திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுடன் சென்று காவல்துறை, தீயணைப்பு துறை, நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்குகிறார். காவலர் பதக்கங்களும் வழங்கப்படுகிறது. முன்னதாக தியாகிகள், அவரது குடும்பத்தினர்களுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார். இறுதியில் மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், தியாகிகள் அமர்வதற்காக அண்ணா விளையாட்டு மைதானத்தின் உள்ளே பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

ஒத்திகை

இதையொட்டி நேற்று அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீசார், என்.சி.சி., ஊர்க்காவல்படை, தீயணைப்பு துறை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

சுதந்திர தின விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இதைத்தொடர்ந்து மைதானத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று காலை மைதானத்துக்குள் பொதுமக்கள் நடை பயிற்சி செல்லவும், வீரர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் போலீசார் தடை விதிக்க உள்ளனர்.

பாதுகாப்பு

விழாவை காணவரும் பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தவிர தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்தும் இரவு, பகலாக வாகன தணிக்கையில் ஈடுபடவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், பாஸ்கரன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


Next Story